ராமநாதபுரம் பஸ் நிலைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது: சந்தை திடல், பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் 4.17 ஏக்கரில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 35 பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ரூ.20 கோடியில்...

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை அடிக்கடி இடிந்து பயணிகளின் மீது விழுந்ததால் அதனை இடித்துவிட்டு விரிவாக்கம் செய்து நவீன வசதிகளுடன் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக புதிய பஸ் நிலைய கட்டிடங்கள் பொக்லைன் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

முதல்கட்டமாக பஸ்நிலையத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு அவர்களுக்கு தற்காலிக பஸ்நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்நிலையத்திற்கு மாற்றாக ராமநாதபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள சந்தை திடல் பகுதியில் இருந்து மதுரை உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் சென்று வருகின்றன. ராமநாதபுரம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்கள் சென்று வருகின்றன.

35 பஸ்கள் நிற்கும் விதத்தில்

புதிய நவீன பஸ்நிலைய கட்டிடம் ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு அதன் வடிவமைப்பு இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இந்த பஸ்நிலையம் 4.17 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்தில் 92 கடைகள் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே 22 பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும் 45 கடைகளுடனும் அமைந்திருந்தது.

புதிய பஸ்நிலையம் பஸ்கள் அனைத்தும் சந்தை திடல் வழியாக உள்ளே சென்று எம்.ஜி.ஆர் சிலை வழியாக வெளியில் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 231 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. கார்கள் வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்ல அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது.

2 ஆண்டு காலத்திற்குள்

தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆண்கள், பெண்களுக்கு தலா 8 கழிப்பறைகள் வீதம் 16 கழிப்பறைகள் அமைக்கப்பட்டு சுகாதாரமிக்க பஸ்நிலையமாக மாற்றப்பட உள்ளது. பஸ்நிலையம் முழுவதும் பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட உள்ளன. பஸ்நிலையத்தின் அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 360 டிகிரி கோணத்தில் துல்லியமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு நவீன புதிய பஸ்நிலைய பணிகள் அனைத்தும் முழுவீச்சில் தொடங்கி உள்ளன. 2 ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்த தகவலை நகர்மன்ற தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments