விடுபட்ட பகுதிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க பரிந்துரை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் விடுபட்ட பகுதிகளுக்கும் பரிந்துரை செய்யப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்.

கூட்டத்தில் நடராஜன் பேசுகையில், "மாவட்டத்தில் துவரம் பருப்பு உற்பத்திக்கு தேசிய வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். தக்காளி விலை குறைவாக இருந்த நேரத்தில் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து விளைச்சல் அதிகமாக இருக்கிற போது தட்டுப்பாடு காலங்களில் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பயிர் காப்பீடு

மிசா மாரிமுத்து பேசுகையில், "காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்றார். சுப்பையா பேசுகையில், "ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவிற்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள அரிமளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான குருங்களூர், மதகம், இரும்பாநாடு, திருவாகுடி, ஏம்பல் ஊராட்சிகள் விடுபட்டு உள்ளது. இந்த ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். செல்லதுரை பேசுகையில், கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார். கொக்குமடை ரமேஷ் பேசுகையில், கடந்த 2022-23-ம் ஆண்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு பயிர் காப்பீடு பெற்று தர வேண்டும். களக்குடியில் ஏரியில் தைல மரங்களை அகற்ற வேண்டும். கண்டிச்சங்காடு பிரிவில் இருந்து நிலையூர் செல்லும் சாலையில் பாசன வாய்க்கால் செல்லும் இடத்தில் திருநெல்லிவயலில் பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

கருகிய நெற்பயிர்கள்

தனபதி பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தின் மழை அளவு குறைவுக்கான காரணத்தை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் வழங்க வேண்டும்" என்றார். இலுப்பூர் பாதிரிப்பட்டியை சேர்ந்த விவசாயி திருப்பதி, கருகிய நெற்பயிர்களை எடுத்து வந்து பேசுகையில், பாதிரிப்பட்டியில் உள்ள மின்மாற்றி பழுதான நிலையில் மின்சாரம் இல்லாமல் விவசாய மோட்டார்கள் பயன்படுத்த முடியாமல் நெற்பயிர்கள் கருகியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கூறினார். இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்தில் துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினர்.

வறட்சி நிவாரணம்

கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா பேசுகையில், மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வறட்சி நிவாரணம் வழங்குவதில் அறந்தாங்கி பகுதியையும், ஆவுடையார்கோவில் தாலுகாவில் விடுபட்ட அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளையும் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் தனலெட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments