புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-வது புத்தக திருவிழா 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 6-ந்தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடக்க இருக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவுபெறும்.

தினசரி காலை முதல் மாலை வரை குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்வுகள், கோளரங்கம், புத்தக விற்பனை, விஞ்ஞானிகள் சந்திப்பு, பிரபல எழுத்தாளர்கள், அறிஞர்கள் கருத்துரை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

புத்தக திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்

விழாவில் மாணவர்களின் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பாக அறிவியல் கண்காட்சி வாகனம், கோளரங்கம், தொலைநோக்கி மூலம் வான்நோக்குதல் போன்ற நிகழ்வு நடத்தப்படவுள்ளது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான பதிப்பகங்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் லட்சக்கணக்கான தலைப்புக்களிலான புத்தகங்கள் இடம் பெறுகிறது. குழந்தைகளுக்காக 10-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெறுகிறது. புத்தக திருவிழாவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகஸ்டு 5-ந் தேதி பரிசு வழங்க உள்ளார். 30-ந் தேதியன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான செஸ்போட்டி நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆகஸ்டு 6-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது.

வரவேற்பு குழு

மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில், கவிஞர் தங்கம்மூர்த்தி, முத்துநிலவன், ஜீவி, மணவாளன், ராஜ்குமார், பன்னீர்செல்வன், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், சதாசிவம், ஸ்டாலின் சரவணன், கிருஷ்ணவரதராஜன், கவிஞர் கீதா, விமலா, பவனம்மாள் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட, ஒன்றிய அளவில் 200-க்கும் மேற்பட்டோரைக்கொண்டு வரவேற்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் புத்தகங்களை கையில் ஏந்தியும், பலூன்களை பறக்கவிட்டும், புத்தகங்களின் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை, வழியாக கீழ ராஜ வீதி, வடக்கு வீதிவழியாக நகர் மன்றத்தை வந்தடைந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, புத்தக திருவிழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, மணவாளன், வீரமுத்து, முத்துக்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments