மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்




மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் சம்பவம்

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. அப்போது 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கு நாடுமுழுவதும் பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பல்வேறு அமைப்புகள் மற்றும் மாதர் சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வகுப்புகள் புறக்கணிப்பு

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கல்லூரி தொடங்கியவுடன் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திய மாணவர் சங்க செயலாளர் மதன்குமார் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து வெளியேறினர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மாவட்ட துணைச்செயலாளர் பிரியங்கா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரியும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவர் அமைப்பினர், மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடையும் எனவும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments