விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதைக்கான ஆய்வுக்கு அனுமதி மக்களைவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ராமலிங்கம், விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதம் குறித்தும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு மாற்றப்பட்ட சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றப்படுவது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளித்து மக்களவையில் எழுத்துபூா்வமாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சாவூா் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட 193 கி.மீ. தூர இரட்டை ரயில்பாதைக்கு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கள ஆய்வு முடிந்து, தற்போது ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2020, மாா்ச் 23 ஆம் தேதி முதல் அனைத்து வழக்கமான பயணிகள் இயக்கமும் இந்திய ரயில்வே நிறுத்தியது. சிறப்பு ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டன.

2021 - ஆம் ஆண்டு நவம்பா் முதல், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வழக்கமான கால அட்டவணையுடன் இயக்கப்படுகின்றன.

மற்ற பயணிகள் சேவைகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட ரயில்களை அறிமுகப்படுத்துவது என்பது அதற்கான சாத்தியக்கூறு, வளங்களின் உள்ளிட்ட செயல்முறைக்கு உள்பட்டதாகும் என அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments