தமிழகத்தில் 18 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் 18 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

18 நிலையங்கள்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில், தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், தென்காசி, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதேபோல, புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளாவில் காசர்கோடு, பையனூர், வடக்காரா, திரூர் மற்றும் சொரணூர் ஆகிய 5 ரெயில் நிலையங்களும், கர்நாடகாவில் மங்களூரு ரெயில் நிலையம் என மொத்தம் 25 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.616 கோடி ஆகும்.

மார்ச் மாதம்

இதில், வடசென்னை பகுதியில் முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் பெரம்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற இருக்கிறது. புதிய முகப்புடன் முற்றிலும் மாறுபட்ட நவீன கட்டமைப்புடன் பெரம்பூர் ரெயில் நிலையம் புனரமைக்கப்பட உள்ளது. இதேபோல, கூடுதல் வசதிகளாக நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறை, தகவல் தொடர்பு மையம், மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்தகம், கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகள் இடம்பெற உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.15 கோடி ஆகும்.

இதேபோல, செங்கல்பட்டு ரெயில் நிலையம் ரூ.18 கோடியிலும், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் ரூ.21 கோடியிலும், திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.16 கோடியிலும், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் ரூ.17 கோடியிலும், அரக்கோணம் ரெயில் நிலையம் ரூ.22 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட உள்ள 18 ரெயில் நிலையங்களின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.381 கோடி ஆகும். ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments