தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடம்: 14 ஆண்டுகளாகியும் முடிவடையாத நாகை- திருத்துறைப்பூண்டி ரெயில் பாதை பணிகள் அந்தரத்தில் தொங்கும் மேம்பாலங்கள்; அவதிப்படும் பொதுமக்கள்




தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடமாக உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதை பணிகள் 14 ஆண்டுகளாக முடிவடையவில்லை. இந்த வழித்தடத்தில் கட்டப்பட்ட பாலங்கள் முழுமை அடையாமல், அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளன. ரெயில் பாதை பணிகள் முழுமை அடையாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகப்பட்டினம்
தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடமாக உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதை பணிகள் 14 ஆண்டுகளாக முடிவடையவில்லை. இந்த வழித்தடத்தில் கட்டப்பட்ட பாலங்கள் முழுமை அடையாமல், அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளன. ரெயில் பாதை பணிகள் முழுமை அடையாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சுற்றுலா தலங்கள்

நாகை மாவட்டம் உலக அளவில் பிரசித்திப்பெற்ற ஆன்மிக தலங்களை கொண்ட மாவட்டமாகும். இங்கு வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் என மும்மதத்தினரும் வழிபடும் தலங்கள் அமைந்துள்ளன. நாகை அருகே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன.

இதுதவிர நாகைக்கு அருகில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கோடியக்கரை சரணாலயம் உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலங்களும் அமைந்திருப்பதால் நாகைக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கருணாநிதியின் கனவு திட்டம்

நாகை பகுதிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி போதுமான அளவுக்கு இல்லை என்பது சுற்றுலா பயணிகளின் பல ஆண்டுகால ேவதனையாக உள்ளது. நாகையை பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரெயில்வே வழித்தடம் அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நாகை மாவட்டத்தில் போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக நாகையில் இருந்து திருக்குவளை வழியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு ரெயில் இயக்குவதற்கு அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். கருணாநிதியின் கனவு திட்டமான நாகை-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு நாகை-திருத்துறைப்பூண்டி இடையே அகல ரெயில்பாதை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

11 பெரிய பாலங்கள்

நாகை பாபாக்கோவில், திருக்குவளை, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி வழியாக திருத்துறைப்பூண்டிக்கு 33.50 கிலோ மீட்டருக்கு ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த புதிய அகல ரெயில் பாதையில் 11 பெரிய பாலங்கள், 74 சிறிய பாலங்கள், 32 ரெயில்வே கிராசிங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டன.

இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு எட்டுக்குடி, திருக்குவளை, செம்பியன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்தது. 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த அகல ரெயில்பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க நாகை பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

14 ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான நாகை-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

பணிகள் தொடங்கி 14 ஆண்டுகளாகியும் முடிவடையாத நிலையில் உள்ள நாகை- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடம்

இதுகுறித்து நாகூர்- நாகை ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு ரூ.126 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் அடித்தளமான பெரிய பாலங்கள் அமைக்கும் பணி ஏறத்தாள முடிவடைந்து விட்டது. இந்த திட்டம் 3, 4 ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாகை - திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம்- அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதைகள் நேரடியாக இணையும்.

நாகை - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி மார்க்கமாக ராமேசுவரம், தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு பயணிக்க திருவாரூர் சென்று சுற்றுப்பாதையில் பயணிக்காமல், நாகையில் இருந்து நேரடியாக செல்லலாம். தென் மாவட்டத்தை நேரடியாக இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் இந்த ரெயில் வழித்தடமும் ஒன்றாகும்.

அதேபோல திருக்குவளை, எட்டுக்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு எளிதாக செல்ல இந்த ரெயில்வே வழித்தடம் உதவும். முக்கியமாக நேரத்தை இந்த ரெயில்வே வழித்தடம் மிச்சப்படுத்தும்.

நிறைவேற்ற முயற்சி

நாகை மாலி எம்.எல்.ஏ. (கீழ்வேளூர்):-

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாகை - திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள், மேம்பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்த பின்னரும் திட்டம் முழுமை பெறவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கீழ்வேளூர் தொகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் வளர்ச்சி அடையும். திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறோம்.

நம்பிக்ைக

மேலவாழக்கரையை சேர்ந்த விஜயேந்திரன்:-

நாகை- திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்ற திட்டம். விவசாய கூலி தொழிலாளிகள் நிறைந்திருக்கும் இந்த பகுதியில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய ரெயில்வே திட்டம் உதவிகரமாக அமையும். 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை' என்பதை போல திட்டம் தொடங்கப்பட்டு, பாலம் கட்டப்பட்ட பின்னரும் ரெயில் பாதை பணிகள் கிடப்பில் கிடப்பது வேதனை அளிக்கிறது. இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தற்போது உள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments