58 வருடங்களாக இயங்கிய அக்பர் நீராவி இன்ஜின்..மீண்டும் இயக்கி இந்திய ரயில்வே அசத்தல்




இந்தியாவில் பெரும்பாலான ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டு ரயில்கள் மின்சாரத்தில் இயங்கி வருகின்றன. மின்சார வசதி இல்லாத இடங்களில் டீசல் இன்ஜின்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மின்பாதை அமைக்க சாத்திய கூறுகள் அல்லாத மலைப்பாதைகள் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் பழைய நீராவி முறை இன்ஜின்கள் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஹரியானா மாநிலம், மேவார் என்ற இடத்தில் அக்பர் என்ற பெயரில் நீராவி இன்ஜின் கொண்ட ரயில் ஒன்று 58 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் அண்மையில் பழுதடைந்து நின்று விட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை அதனை சரி செய்து மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது.

முகலாய மன்னர் அக்பர் பெயரில் அமைந்துள்ள இந்த ரயிலானது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாகும். பாரம்பரியம் மாறாத நீராவி இன்ஜின் மற்றும் பழமை வாய்ந்த எழில் மிகு தோற்றம் ஆகியவை இந்த ரயிலில் சிறப்புகளாக உள்ளன.

2012ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட ரயில் :

டெல்லி மற்றும் ஆழ்வார் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. அதற்குப் பிறகு வடக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள அமிர்தசரஸ் பணிமனையில் இந்த ரயில் இன்ஜின் முற்றிலுமாக சர்வீஸ் செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பேக்கேஜ் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இயங்கி வந்தது. குறிப்பாக சரிஸ்கா தேசிய பூங்காவுக்கு செல்ல இந்த ரயில் உதவியாக இருந்தது.

அமிருதசரஸ் பணிமனை :

நாட்டிலேயே நீராவி இன்ஜின் கொண்ட ரயில்களை பழுது பார்க்கும் ஒரே பனிமனை அமிருதசரஸ் பனிமனை என்ற பெயரை பெற்றுள்ளது. பாரம்பரியம் மிகுந்த ரயில்களை பழுது பார்க்கும் வசதிகள் இந்த பணிமனையில் உள்ளன.

அக்பர் நீராவி இன்ஜின் ரயில் கடந்த 1962ஆம் ஆண்டில் முதன் முதலாக சேவையை தொடங்கியது. ஹிந்தி திரைப்பட உலகில் எண்ணற்ற படங்களின் படப்பிடிப்பு இந்த ரயிலில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் சல்மான் கான் நடித்த சுல்தான் என்னும் திரைப்படம் இதில் படம்பிடிக்கப்பட்டது. அப்போது ரயிலை அவர் துரத்தி பிடிப்பதை போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

சக்,சக் என்ற இதன் ஒலியும், நீராவி கலந்த கரும்புகையும் நம் மனதில் பழங்கால ரயில் பயண அனுபவத்தை ஏற்படுத்துவதாக அமையும். ரயில் மலைப்பகுதியில் செல்லும் போது, பசுமை போர்த்திய இயற்கை அழகுக்கு மத்தியில் செல்கின்ற பயண அனுபவம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments