தனுஷ்கோடி முதல் தொண்டி வரை கடலோர ரோந்து கப்பல்கள் தீவிர கண்காணிப்பு


76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி முதல் தொண்டி வரை கடலோர ரோந்து கப்பல்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி முதல் தொண்டி வரை கடலோர ரோந்து கப்பல்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.

பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் வருகின்ற 15-ந்தேதி அன்று 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 அதிவேக கப்பல்கள் தனுஷ்கோடி முதல் ராமேசுவரம், மண்டபம், தொண்டி வரையிலான இந்திய கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.


அதுபோல் மண்டபம் முதல் தனுஷ்கோடி வரையிலான தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பலிலும் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்திக்கு உட்பட்ட இந்திய கடல் பகுதியில் மட்டும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.


ஹெலிகாப்டர்களிலும் கண்காணிப்பு

இதை தவிர உச்சிப்புளி ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து டார்னியர் விமானம் மற்றும் 2 ஹெலிகாப்டர்களிலும் கடற்படை வீரர்களும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியில் சந்தேகப்படும்படியான படகுகளோ, கப்பல்களோ ஏதேனும் வருகின்றதா? என்பது குறித்தும் தாழ்வாக பறந்தபடி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக பெரிய கப்பல் ஒன்றும் கச்சத்தீவு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments