கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தினரும் விண்ணப்பிக்கலாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோரும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க உத்தரவிட்டு உள்ளார்.

முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது.

அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக வருகிற 18, 19, 20-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments