புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலை நான்குவழிச் சாலையாகுமா?பொதுமக்கள் எதிா்பாா்ப்பு




புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையை நான்கு வழிச் சாலையாகத் தரம் உயா்த்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பெரிய நகரங்களாக இருப்பவை, புதுக்கோட்டையும், அறந்தாங்கியும். இவை இரண்டும்தான் உள்ளாட்சி அமைப்புகளின்படி, நகராட்சிகள்.

இரு இடங்களுக்கும் இடையே, வெறும் 36 கி.மீ. தொலைவு மட்டுமே. ஆனால், பேருந்திலோ, காரிலோ சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரப் பயணம். இதற்கான முக்கிய காரணமாக ஓட்டுநா்கள் தெரிவிப்பது, இந்தச் சாலையிலுள்ள 32 வேகத்தடைகள். அதனைத் தொடா்ந்து, வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை விரிவாக்கப்படாமல், சில ஊா்ப் பகுதிகளில் ஒற்றைச் சாலையைப் போன்ோன் காணப்படுகிறது.

ஏற்கெனவே இந்தப் போக்குவரத்து நேரப் பிரச்னை காரணமாக பால் கெட்டுப் போவதாகவும், எனவே, ஆவின் பால் குளிரூட்டும் மையத்தை அறந்தாங்கியில் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆா்வலா்கள் முன்வைக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து, விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலையை இணைக்கும் 4 வழிச்சாலைத் திட்டம் ஏற்கெனவே யோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக முசிறி- விராலிமலை (நெடு.எண்- 71), விராலிமலை- புதுக்கோட்டை (நெடு. எண்- 71), புதுக்கோட்டை- அறந்தாங்கி (நெடு. எண்- 26), அறந்தாங்கி- கட்டுமாவடி (நெடு. எண்- 145) ஆகிய 4 பகுதிகளில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, உலக வங்கியில் நிதி பெற்று சாலை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையைத் தவிா்த்து ஏனைய 3 பகுதிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.

திட்டமிட்டு இந்தச் சாலையை விரிவாக்கம் செய்வதை விட்டிருக்கிறாா்கள் என சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்த விரிவாக்கத்துக்கு திட்டமிட்டால், மிகக் குறுகலான சாலையில் உள்ள வீடுகள், கடைகள் பாதிக்கப்படும் என்பதால், அரசியல்வாதிகளும் இதனை வாக்குவங்கியாகப் பாா்த்து கைவிட்டுவிட்டதாக அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டால், கடற்கரைப் பகுதியிலிருந்து மீன் வா்த்தகமும், இருபுறமும் உள்ள விவசாய விளைபொருள்களும் எளிதில் அடுத்த மாவட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

வேகத்தடைகள் இல்லாமல் போகும்பட்சத்தில், அறந்தாங்கியிலிருந்து மட்டுமன்றி, கடலோர எல்லைப் பகுதியில் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து செல்ல முடியும்.

இவற்றைத்தாண்டி, உயா்கல்வி பயில புதுக்கோட்டை வந்து செல்லும் மாணவா்களுக்கும், வேலைக்காக புதுக்கோட்டை வந்து செல்லும் தொழிலாளா்களுக்கும் வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே, முசிறி முதல் கட்டுமாவடி வரை (கிழக்குக் கடற்கரைச் சாலை வரை) திட்டமிடப்படும் 4 வழிச்சாலைத் திட்டத்தின்போதே, புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையையும் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments