சுதந்திர தின விழா: கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றினார் பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்




புதுக்கோட்டையில் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை கலெக்டர் மெர்சி ரம்யா ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நேற்று காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை கலெக்டர் மெர்சி ரம்யா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரை பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் நாட்டின் மூவர்ண கொடி நிறத்திலான பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும் பறக்கவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து 41 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 75 ஆயிரத்து 260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் காவல்துறை உள்பட அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 499 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 667 மாணவ, மாணவிகளின், வரவேற்பு நடனம், பெண் முன்னேற்றம், உலக அமைதி, பெண் கல்வி, புரட்சி பெண்கள், சமுதாயத்தில் பெண்கள் வளர்ச்சி, தேசப்பற்று மற்றும் சிலம்பாட்டம் ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் நடனமாடினர். மேலும் சிலம்பம், யோகாசனம் செய்து அசத்தினர். முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கலெக்டர் மெர்சி ரம்யா பரிசு வழங்கி பாராட்டினார்.

அதிகாரிகள்

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ரம்யாதேவி (காவிரி-வைகை-குண்டாறு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயலட்சுமி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பொது விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுடன் அமர்ந்து கலெக்டர் மெர்சி ரம்யா உணவு சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் 25 கோவில்களில் பொது விருந்து நடைபெற்றது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments