அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை திறப்பு

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னக்குரும்பி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த கடை மூடப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணியளவில் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- குன்னக்குரும்பி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் தினமும் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் எங்கள் கிராமத்தில் விபத்து குறைந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments