கோட்டைப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோட்டைப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே கொடிக்குளம் கிராமம், புதுக்குடி கிராமத்தின் இடையே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளையும் இக்கோவிலில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

6 பவுன் நகை கொள்ளை

இதையடுத்து ேநற்று காலை பூஜை செய்ய பூசாரி கோவிலுக்கு வந்தார். அவர் கோவில் நடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கருவறையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து நிர்வாகிகள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அப்போது கோவில் பின்புறம் உள்ள சிமெண்டாலான ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments