கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்.

உரிமைத்தொகை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைப்பதற்கு முந்தைய நாளிலே பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சிலருக்கு பணம் வரவாகவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணம் கிடைக்காதவர்கள் தங்களுக்கு ஏன் பணம் கிடைக்கவில்லை என்பதை அந்தந்த தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் உதவி மையங்களில் நேரில் சென்று கேட்டு தெரிந்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டன.

பெண்கள் குவிந்தனர்

அந்த வகையில் புதுக்கோட்டையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காத பெண்கள் நேற்று காலை தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர். கூட்டம் அதிகமானதால் அவர்களை வரிசையில் நிற்க ஊழியர்கள் அறிவுறுத்தினர். அதே நேரத்தில் தங்களது வீட்டு பெண்களுக்காக ஆண்கள் சிலரும் வந்து வரிசையில் நின்றனர்.

தாசில்தார் அலுவலகத்தில் கணினிகளில் ஊழியர்கள் இத்திட்டத்தில் சரிபார்ப்பு பணிக்காக அமர வைக்கப்பட்டிருந்தனர். வரிசையில் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களது ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் கார்டு எண் விவரங்களை வைத்து இத்திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தில் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன்? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

சர்வர் கோளாறு

ஒரே நேரத்தில் அந்த இணையதளம் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டதால் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதனால் சரிபாா்ப்பு பணி தாமதமடைந்தது. சிலருக்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத விவரங்கள் தெரிந்தது. மேலும் சிலர் இத்திட்டத்தில் பயன்பெற அரசு அறிவித்துள்ள தகுதிகள் இல்லாதது தெரியவந்தது. அவர்களுக்கு உரிய பதில்களை ஊழியர்கள் அறிவித்தனர்.

மேலும் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தினர். சர்வர் கோளாறு காரணமாக சிலருக்கு சரிபார்க்க முடியாமல் போனது. அவர்களை நாளை (அதாவது இன்று) வருமாறு அறிவுறுத்தினர். ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் குவிந்ததால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல மாவட்டத்தில் இத்திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகங்களில் குவிந்தனர்.

ஆலங்குடி

இதேபோல் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இருந்தும், விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்வதற்காக ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் கூட்டத்தை சரி செய்தனர். மேலும் அதிகாரிகள் அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments