சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா தலம் அமைக்க மல்லிப்பட்டினம், பாம்பன், தனுஷ்கோடி, கீழக்கரை உள்பட 13 கலங்கரை விளக்கங்கள் தேர்வு மத்திய அரசு செயலாளர் தகவல்
மல்லிப்பட்டினம் பாம்பன் தனுஷ்கோடி கீழக்கரை உள்பட தமிழகத்தில் உள்ள 13 கலங்கரை விளக்கங்களில் பொதுமக்கள் வந்து பார்வையிடுவதற்காக சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை அமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது என்று மத்திய அரசு செயலாளர் டி.கே.ராமசந்திரன் கூறினார்.

கலங்கரை விளக்கம் தினம்

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந்தேதி நாடு முழுவதும் கலங்கரை விளக்கம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பெட்ஸ் பள்ளி ஆடிட்டோரியத்தில் பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இசை கச்சேரி நேற்று நடந்தது. இதில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பிரதமர் ஆலோசனை

இதுகுறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலாளர் டி.கே.ராமசந்திரன் கூறும் போது, ‘நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனையின் பேரிலும், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் அறிவுரையின் பேரில், சமானிய மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் கலங்கரை விளக்கங்கள் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது.

13 கலங்கரை விளக்கம் தேர்வு

குறிப்பாக நாடு முழுவதும் 203 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றில் 10 சதவீதத்துக்கும் மேல் அதாவது 26 கலங்கரை விளக்கங்கள் தமிழகத்தில் உள்ளன. 75 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.60 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 

பழவேற்காடு, 
மாமல்லபுரம்,
பூம்புகார், 
காரைக்கால், 
நாகப்பட்டினம், 
கோடியக்கரை, 
மல்லிப்பட்டினம், 
பாம்பன், 
கீழக்கரை, 
தனுஷ்கோடி, 
மணப்பாடு, 
குத்தன்குழி, 
கன்னியாகுமரி,  

ஆகிய 13 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கலங்கரை விளக்கங்களில் பொதுமக்கள் நலன் கருதி சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம், டெலஸ்கோப் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. மெரினா கடற்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உள்ள கலங்கரை விளக்கம் தான் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாவில் உள்ள கலங்கரை விளக்கம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மும்பையில் கடலோர நாடுகளை கொண்ட 50 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அதில் பல்வேறு கருத்துகள் குறித்து விவாதங்களும் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன், கலங்கரை விளக்கங்கள் மற்றும் இலகுரக கப்பல்களின் துணை இயக்குனர் ஜெனரல் டி.வெங்கட்ராமன், இயக்குனர் கே.கார்த்திக் செஞ்சுடர் உள்ளிட்டோர் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments