RTI: தகவல் ஆணைய உத்தரவில் மேல்முறையீட்டுக்கு வசதி!



தகவல் ஆணைய உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் குறித்து மீண்டும் மேல்முறையீடு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அரசு துறை செயல்பாடுகளை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, பொது மக்கள் மனு செய்யலாம். இதன் அடிப்படையில், 30 நாட்களுக்குள், பொது தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும்.

இதில் பதில் கிடைக்காத நிலையில், மனுதாரர்கள், மேலதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம். இதிலும் பதில் கிடைக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீட்டுக்காக அணுகலாம்.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை, தகவல் ஆணையம் விசாரித்து, மனுதாரருக்கு தகவல் அளிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். இந்த உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.

ஆனால், பல இடங்களில், அரசு துறை மேலதிகாரிகள், தகவல் ஆணைய உத்தரவை செயல்படுத்துவதில்லை. இதனால் பாதிக்கப்படும் மனுதாரர்கள், நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆணைய உத்தரவுகள் கிடப்பில் போடப்படும் நிலையில், அது குறித்து மீண்டும் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வர, புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, கிடப்பில் போடப்பட்ட ஆணைய உத்தரவுகளை செயல்படுத்த கோரி, சம்பந்தப்பட்டவர்கள் ஆணையத்தில் மனு செய்யலாம்.

இது சிறப்பு மேல்முறையீடாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தகவல் கிடைக்க, ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதற்கான மாதிரி படிவத்தை, மாநில தகவல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன், மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பிரிவின் அடிப்படையில் மனு செய்தால், ஆணையம் அதை விரைவாக விசாரிப்பதில்லை.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க, ஆணையம் தயங்குகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், 50,000 ரூபாய் வரை இழப்பீடு கோரவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments