தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன


சம்பா சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக ஆங்காங்கே நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நாற்று நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் போதுமான மழை இல்லை என்றாலும் கிணற்றுப்பாசனம், ஆழ்குழாய் கிணறு மூலம், ஏரி, குளங்களில் உள்ள தண்ணீர் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சம்பா நெல் சாகுபடி மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இல்லை என விவசாயிகள் தெரிவித்து வந்தனர். மேலும் சம்பா நெல் சாகுபடி தொடங்குகிற நிலையில் விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

உர மூட்டைகள்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் அதிகாரிகள், விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக தனியார் நிறுவனங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் யூரியா, டி.ஏ.பி., காம்பளக்ஸ் உரங்கள் மொத்தம் 1,288 மெட்ரிக் டன் மூட்டைகள் இன்று புதுக்கோட்டைக்கு வந்தன.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிறுத்தும் இடத்தில் உர மூட்டைகளை வேகன்களில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டன. மேலும் லாரிகள் மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் கடைகளுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கும் உர மூட்டைகள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 "மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் யூரியா 4,498 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1513 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1,564 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5,291 மெட்ரிக் டன்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமாகவே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments