வருகிற 7-ந்தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு




வங்கிகள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை

கருப்பு பணம், கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் ேநாக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால் அந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றிக்கொண்டனர்.

இந்த நோட்டுகளுக்கு பதிலாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டன.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இதில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ந்தேதி ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்தது.

இந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் எனக்கூறிய ரிசர்வ் வங்கி, ஆனால் இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தவோ அல்லது வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ளவோ செய்யுமாறு மக்களையும் கேட்டுக்கொண்டது.

அதன்படி மக்கள் தங்களிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொண்டனர்.

இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

ஆனால் இந்த காலக்கெடுவை மேலும் ஒரு வாரம் நீட்டித்து ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும்.

96 சதவீதம் திரும்பியது

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான காலக்கெடுவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ந்தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இதில் ரூ.3.42 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் செப்டம்பர் 29-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை வங்கிக்கு திரும்பி உள்ளன. வெறும் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன.

இதன் மூலம் 96 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து செல்லுபடியாகும்

2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான புதிய காலக்கெடு அக்டோபர் 7-ந்தேதி முடிவடைந்தாலும், அதற்குப்பின்னரும் அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். ஆனாலும் தாமதமின்றி இந்த நோட்டுகளை மக்கள் வங்கிக்கணக்கில் செலுத்தவோ, மாற்றிக்கொள்ளவோ வேண்டும்.

8-ந்தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19் வெளியீட்டு அலுவலகங்களில்தான் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை ஒரு நேரத்தில் மாற்றிக்கொள்ள முடியும்.

இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கு அறிவுரை

2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வங்கிகளுக்கு தினமும் வரும் 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான தரவுகளை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பராமரிப்பதுடன், அவற்றை ரிசர்வ் வங்கிக்கும் அனுப்ப வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அக்டோபர் 8-ந்தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments