50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்




பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் விதைகள்

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அவற்றின் மருத்துவ குணங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத்துறை மூலம் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களான தங்க சம்பா, சீரக சம்பா, தூயமல்லி மற்றும் கருப்பு கவுனி ஆகிய விதைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

50 சதவீத மானியம்

இத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில், கிலோ ஒன்றுக்கு ரூ.25 என்ற விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல் ரக விதைகளை 50 சதவீத மானிய விலையில் பெறுவதற்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments