40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் நாகையில் இருந்து இலங்கைக்கு 50 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு சென்றது
நாகையில் இருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைத்தார்.

சோழர்கால துறைமுக நகரம்

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. இங்கு பன்னாட்டு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பாக நடந்து வந்தது. கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாகையில் இருந்து கைவினை பொருட்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்டு உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தென் இந்திய பகுதிகளுக்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் துறைமுகமாகவும், நாகை துறைமுகம் செயல்பட்டு வந்தது.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில், ஆடை, ஆபரணங்கள் நாகையில் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு புகழ்பெற்ற நாகை துறைமுகம் காலப்போக்கில் பொலிவிழந்தது.

கப்பல் போக்குவரத்து

சோழர் கால துறைமுகம் நாகையில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

அதன்பேரில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இந்தியா-இலங்கை இரு நாடுகள் இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்தன. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்துக்கு வந்தது. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது.

50 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதற்கான தொடக்க விழா நாகை துறைமுகத்தில் காலை நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனாவால், அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி, செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கி கப்பல் புறப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி கப்பலை வழி அனுப்பி வைத்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கப்பல் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கப்பலில் சென்ற ஊழியர்கள் கரையில் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

75 சதவீத கட்டண சலுகை

கப்பல் போக்குவரத்து தொடங்கும் முதல் நாளான நேற்று ஒரு நாள் மட்டும் 75 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணம் செய்ய ஒருவருக்கு கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 500, ஜி.எஸ்.டி. 18 சதவீதம் என மொத்த கட்டணம் ரூ.7 ஆயிரத்து 670 ஆகும்.

தற்போது 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2 ஆயிரத்து 375, ஜி.எஸ்.டி. 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2 ஆயிரத்து 803 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நாகை துறைமுகத்தில் இருந்து 50 பயணிகளுடன் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு சென்ற கப்பல் நண்பகல் 12.15 மணிக்கு இலங்கை காங்கேசன்துறையை அடைந்தது. மீண்டும் மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.

சுற்றுலா மேம்படும்

விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் பேசியதாவது:-

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையே சுற்றுலா மேம்படும்.

நாகை அருகே உள்ள வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால் அருகே உள்ள திருநள்ளார் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஆகிய இடங்களுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் எளிதில் வந்து செல்ல முடியும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் நமது நாட்டின் வருமானம் அதிகரிக்கும்.

தலைமன்னாருக்கு...

இந்தியா-இலங்கை இடையே நீண்ட கால உறவு இருந்தது. தூத்துக்குடி, ராமேசுவரத்தில் இருந்து இலங்கை கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. ஆனால் இயற்கை சீற்றம், போதிய வருமானம் இல்லாதது என பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தியா-இலங்கை இடையே மீண்டும் நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி முதல் கட்டமாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன்துறை அமைந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் இடையே வர்த்தகரீதியாக வருமானம் அதிகரிக்கும்.

இவ்வாறு மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் பேசினார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து மத்திய அரசுக்கு பல்வேறு நிலைகளில் அழுத்தம் கொடுத்து வந்தார். அதைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் இருந்து சிங்கப்பூர், பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கப்பல் சேவை இருந்ததால் தற்போது இந்த சேவையை மீண்டும் தொடங்குவது எளிதாக அமைந்தது. கப்பல் சேவைக்கு அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

50 சதவீத மானியம்

இதனால் இரு நாடுகள் இடையே வணிகம் பெருகும். தமிழ்நாட்டின் கலாசார பெருமை, சுற்றுலா ஆகியவை மேம்படும். தொப்புள் கொடியான இலங்கை உறவை மேம்படுத்துவதற்கு வசதியாக அமையும். தற்போது 50 பயணிகளுடன் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட்டை ஒப்பிட்டு பார்க்கும்போது கூடுதலாக தெரிகிறது.

இங்கு விவசாயிகளும், மீனவர்களும் அதிகம் வசிப்பதால் மத்திய சுற்றுலாத்துறை அல்லது கப்பல் போக்குவரத்து துறை சார்பில் டிக்கெட்டுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். அதேபோல் ஆண்டு முழுவதும் இயக்கும் வகையில் கப்பலை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.

ரணில் விக்ரமசிங்கே

விழாவில் காணொலி காட்சி வாயிலாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மந்திய மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மத்திய அரசின் துறைமுகங்கள் துறை செயலர் ராமச்சந்திரன், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகைமாலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் கதிர்யாதவ் நன்றி கூறினார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டிருப்பது நாகை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதனால் நாகை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பை போன்று நாகை துறைமுகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ‘மெட்டல் டிடெக்டிவ்’ கருவி மூலம் சோதனை செய்த பின்னரே பயணிகள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சர்வதேச நாடுகளில் இருந்து நாகைக்கு பயணிகள் வருவார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப் பட்டுள்ளது.

இலங்கை காங்கேசன்துறைக்கு பயணம் செய்ய நேற்று 50 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு வர அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அவர்களிடம் விமான நிலையத்தில் பின்பற்றப்படும் குடியுரிமை சோதனை, மருத்துவ பரிசோதனை, விசா, பயணிகளின் உடமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் கப்பல் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் கப்பலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்கள் அடிப்படையில் இருக்கையில் அமர வைக்கப்பட்டு பயண நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments