புதுக்கோட்டை வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு




புதுக்கோட்டை வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இரு வழிப்பாதை

நாட்டில் ரெயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு வருகிற நிலையில் அதற்கேற்ப ரெயில் பாதைகளும் அமைக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அகல ரெயில் பாதை வழித்தடத்தில் இருவழி ரெயில்பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயிலும் இரட்டை ரெயில் பாதை பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இருப்பினும் பல வழித்தடங்களில் இரட்டை ரெயில் பாதை இல்லாமல் உள்ளன. இரட்டை ரெயில் பாதை மூலம் ரெயில்கள் அந்த வழித்தடத்தில் கூடுதலாகவும், இடைநில்லாமல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் வேகத்தில் இயக்க முடியும்.

புதுக்கோட்டை மார்க்கம்

இந்த நிலையில் திருச்சி-கரூர் வழித்தடத்தில் அகல ரெயில் பாதையில் மற்றொரு ரெயில் பாதை அமைக்க பயணிகள் உள்பட பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதில் அந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்காக நிலங்களை சர்வே செய்யும் பணிக்கு ரெயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கி உள்ளது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் சர்வே பணியை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை வழித்தடத்தில் திருச்சி-ராமேசுவரம் இடையே அகல ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிற நிலையில், இரட்டை ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் புதுக்கோட்டை மார்க்க பாதையில் சென்னை, தென் மாவட்டங்கள், வட மாநிலங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்க முடியும். குறிப்பாக பகல் நேரங்களில் சென்னைக்கு ரெயில்கள் கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும்.

பாம்பன் பாலம்

பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைந்தால் எதிர்கால தேவை மற்றும் போக்குவரத்து வசதிக்கு பயனுள்ளதாக அமையும். எனவே மக்கள் பிரதிநிதிகளும் தற்போது ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டால் பின்னாளில் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

News Credit : Dailythanthi 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments