ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம் சென்னையில் த.மு.மு.க. போராட்டம் ஜவாஹிருல்லா, வேல்முருகன், திருமாவளவன் பங்கேற்பு
நீண்டகாலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனை கண்டித்து சென்னை எழும்பூரில் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா. பாபநாசம் தொகுதி எம்எல்ஏவாக இவர் இருக்கிறார். இந்நிலையில் தான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவவிக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது.அதோடு முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

 சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் என்பது அவசியமாகும்.அந்த வகையில் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்து அதற்கான கோப்புகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைத்தது.

 ஆனால் இப்போது வரை அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இந்த பட்டியலில் சில சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனால் தான் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் அக்டோபர் 28 அன்று நடைபெறுவதாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.

ஆனால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மேலும் அவர்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் செயலை கண்டித்ததோடு, தமிழக அரசு பரிந்துரைத்த கைதிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கூறினர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு அனைவரும் ஊர்வலமாக வந்தனர். அப்போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தை கொன்று அவரை பலாத்காரம் செய்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்பினர். அதோடு மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராகவும் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிவாதம் பிடித்த கவர்னர்

போராட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பும் போது அதற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு. முந்தைய காலங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் முரண்பாடு இருந்தாலும் கவர்னர்கள் யாரும் பிடிவாதமாக இருந்ததில்லை. ஆனால், ஆர்.என்.ரவி பிடிவாதம் பிடித்தவராக இருக்கிறார்.

49 கைதிகளை விடுதலை செய்யும் கோப்புக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரோலில் விடுதலை

பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் கோப்பில் கையெழுத்திட வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதேபோல, கவர்னர் கையெழுத்திடும் வரை காத்திருக்காமல் தமிழக அரசு கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments