நவம்பர் 12 தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக தீபாவளிக்கு 16,895 சிறப்பு பஸ்கள் நவம்பர் 9-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் விடப்படுகிறது தமிழக அரசு ஏற்பாடு
தித்திக்கும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை, படிப்பு காரணமாக வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

லட்சக்கணக்கானோர் பயணம்

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வதால், தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளிலேயே இருக்கைகள் நிரம்பி விட்டன. அடுத்தகட்டமாக மக்களின் பார்வை பஸ் போக்குவரத்தை நோக்கி திரும்பி உள்ளது.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுவதால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சையே நம்பி உள்ளனர்.

தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு படையெடுப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

16,895 சிறப்பு பஸ்கள்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, சிறப்பு செயலாளர் தி.ந.வெங்கடேஷ், போக்குவரத்து துறை கமிஷனர், காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,895 அரசு சிறப்பு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னைக்கு திரும்பிவர 9,467 பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,675 சிறப்பு பஸ்கள் சேர்த்து மொத்தம் 3 நாட்களில் 10,975 பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

பிற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களும் 5,920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆக மொத்தம் தீபாவளி பண்டிகைக்காக 16,895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 3,167 சிறப்பு பஸ்களும் சேர்த்து 3 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 9,467 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

6 இடங்களில் இருந்து இயக்கம்

பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,292 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச் சாலை பஸ் நிறுத்தம், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

9-ந் தேதி சென்னையில் இருந்து 1,365 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல் 10-ந் தேதி சென்னையில் இருந்து 1,895 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,710 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பஸ்கள் எங்கிருந்து புறப்படும்?

மேலும், 11-ந் தேதி சென்னையில் இருந்து 1,415 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதாவது தினசரி இயக்கப்படும் பஸ்கள் 6,300, சிறப்பு பஸ்கள் 10,595 என இந்த 3 நாட்களும் மொத்தம் 16,895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பஸ்கள் மட்டும் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து, கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

11 முன்பதிவு மையங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லலாம்.

சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்ய காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையமும், தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) பஸ் நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்ற முகவரியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் திரும்ப 12-ந் தேதி சென்னைக்கு 1,275 சிறப்பு பஸ்களும், பிற இடங்களுக்கு 1,250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதேபோல் 13-ந் தேதி சென்னைக்கு 975 சிறப்பு பஸ்களும், பிற இடங்களுக்கு 1,395 சிறப்பு பஸ்களும், 14-ந் தேதி சென்னைக்கு 917 சிறப்பு பஸ்களும், பிற இடங்களுக்கு 1,180 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட இருக்கின்றன. இந்த 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 6,992 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 13,292 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புகார் தெரிவிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக செயல்படும் 4 பஸ் நிலையங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1. மாதவரம் புதிய பஸ் நிலையம் - செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள்.

2. கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம் - கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம்.

3. தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் - திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள்.

4. தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் - திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள்.

5. பூந்தமல்லி விரைவு சாலை பஸ் நிறுத்தம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள்.

6. கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் - மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments