ஆந்திராவில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு “பாதுகாப்பில் அலட்சியம்” என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் ஆந்திராவில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. பாதுகாப்பில் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.




ஆந்திராவில் நேற்று முன்தினம் 2 பயணிகள் ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

ரெயில்கள் மோதல்

விஜயநகரம் மாவட்டத்தில் கன்டகப்பள்ளி-அலமந்தா கிராமங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது அந்த ரெயிலின் பின்பகுதியில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரெயில் பலமாக மோதியது.

அதில் 3 ரெயில் பெட்டிகள் முற்றிலுமாக நசுங்கின. மேலும் சில பெட்டிகள் தடம் புரண்டு, அடுத்த தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் பெட்டிகளின் மீது விழுந்தன.

சாவு எண்ணிக்கை உயர்வு

இந்த கோர ரெயில் விபத்தில் 8 பேர் பலியாகினர். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

பலியானவர்களில் 11 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும் விஜயநகரம் மாவட்ட கலெக்டர் நாகலட்சுமி தெரிவித்தார்.

இந்த விபத்தில் மொத்தம் 54 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

முழுவீச்சில் மீட்பு பணி

விபத்தில் சிக்கிய விசாகப்பட்டினம்-பாலசா ரெயிலின் 11 பெட்டிகள் அலமந்தா ரெயில் நிலையத்துக்கும், விசாகப்பட்டினம்-ராயகடா ரெயிலின் 9 பெட்டிகள் கன்டகப்பள்ளி ரெயில் நிலையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர். அதற்கு தேவையான சாதனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டவாளங்கள் சீரமைப்பு

விபத்து நடந்த இடத்தில் சேதம் அடைந்த தண்டவாளங்கள் 19 மணி நேரத்துக்குள்ளாக சீரமைக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதன்படி அங்கிருந்து, சேதம் அடைந்த ரெயில் பெட்டிகள் ஒரு பெரிய கிரேன் கொண்டு அகற்றப்பட்டு, தண்டவாளங்கள் துரிதமாக சீரமைக்கப்பட்டன.

இந்த பணியில் சுமார் ஆயிரம் ரெயில்வே தொழிலாளர்கள் பல மணி நேரம் ஈடுபட்டனர். அந்த பணியை கிழக்கு கடற்கரை ரெயில்வே பொது மேலாளர் மனோஜ் சர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கண்காணித்தனர்.

தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு ஒரு சரக்கு ரெயிலும், புவனேஸ்வர்-பெங்களூரு பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் அந்த வழியே சென்றன.

முதல்-மந்திரி ஆறுதல்

ஆந்திர ரெயில் விபத்தால் மொத்தம் 47 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 24 ரெயில்கள் வேறு தடத்தில் மாற்றிவிடப்பட்டன. 8 ரெயில்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

இதற்கிடையில், ஆந்திர ரெயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆந்திர ரெயில் விபத்தில் பல அரிய மனித உயிர்கள் பறிபோனதையும், பலர் காயம் அடைந்ததையும் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும் பிரார்த்திக்கிறோம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும்.

காற்றில் பாதுகாப்பு விதிகள்

ஒடிசா ரெயில் விபத்துக்கு பிறகு பாதுகாப்பு விதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுப்பட்டுள்ளதை ஆந்திர ரெயில் விபத்து எடுத்துக்காட்டுகிறது. அங்கு பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

புதிய ரெயில்களை மிகுந்த ஆரவாரம், பிரசாரத்துடன் தொடங்குவதில் மத்திய அரசு காட்டும் ஆர்வத்தை, ரெயில் பாதுகாப்பிலும், தினசரி அதில் செல்லும் கோடிக்கணக்கான பயணிகளின் நலத்திலும் காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் அடைவார்கள் என நம்புகிறேன்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில், ‘ஆந்திர ரெயில் விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற ரெயில் விபத்துகள் துரதிர்ஷ்டவசமாகவும், திரும்பத்திரும்ப நடப்பதாகவும் ஆகிவிட்டன. ரெயில்வே எப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழிக்கப்போகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுகோள்

இதற்கிடையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இந்த ரெயில் விபத்தின்போது, பிரேக் அமைப்பும், எச்சரிக்கை அமைப்பும் ஏன் செயல்படவில்லை? சிக்னல் ஏன் செயலிழந்தது? தகவல்தொடர்பு அமைப்பும் செயல்படாதது ஏன்?

சென்றுகொண்டிருக்கும் ஒரு ரெயில், அதே தடத்தில் நின்றுகொண்டிருக்கும் ரெயில் மீது மோதுவது, இயல்பாகவே பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்த விபத்தால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு அரசு முழு ஆதரவை வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

மேலும், விபத்து நடந்த இந்த ரெயில் தடத்தில் மட்டும் அல்லாமல், நாட்டில் உள்ள எல்லா ரெயில்வே தடங்களிலும், மேற்கண்ட கேள்விகளுக்கான அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக ஒரு உயர்மட்ட தணிக்கை குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியையும், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆய்வின் மூலம், இதுபோன்ற மோசமான விபத்துகள் மீண்டும் நடக்காமல் தடுக்கலாம்’ என்று கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments