நள்ளிரவில் 3 படகுகளுடன் மேலும் 23 பேர் கைது: ஒரே நாளில் 37 ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை விடுவிக்கக்கோரி ெரயில் மறியல்-தொடர் உண்ணாவிரதம் அறிவிப்பு




இலங்கை கடற்படை நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமேசுவரத்தை சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 5 படகுகளையும் சிறைபிடித்ததனர். விடுவிக்கக்கோரி ரெயில் மறியல், தொடர் உண்ணாவிரத போராட்டங்களை மீனவ அமைப்புகள் அறிவித்தன.

சிறையில் தவிக்கும்மீனவர்கள்

கடந்த சில வாரங்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது அடக்கடி நடக்கின்றன.

அதிலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 27 பேரை சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த 27 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் 12 நாட்களாக தொடர் வேலைநிறுத்தம் செய்துவந்தனர்.

37 மீனவர்கள்

இந்த நிலையில் அவர்களுக்கு இலங்கை கோர்ட்டு காவல் நீட்டிப்பு செய்ததை தொடர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் நாளாக நேற்று முன்தினம் அமைந்தது.

அன்று இரவில் 2 விசைப்படகுகளில் ெசன்றிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மேலும் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்த அஜித் குமார், ஜெரோ, சகாயம், முனியசாமி, சந்தியா, ஆண்டி, உலகநாதன், நம்பு, முருகன், அன்ரன், தனவேல், பாலமுருகன், புவனேஷ், குமார், முத்துமாணிக்கம், இசக்கிமுத்து, மணிமாறன், விஜய பிரகாஷ், முருகன், சிவக்குமார், பாலமுருகன், யோசுவா, ராமகிருஷ்ணன் என 23 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைபிடித்து கைது செய்தனர்.

ஒரே நாளில் 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது ராமேசுவரம் மீனவர்களை அதிர்ச்சியும், வேதனையும் அடையச் செய்துள்ளது.

ரெயில் மறியல், தொடர் உண்ணாவிரதம்

இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) முதல் ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், வருகி்ற 3-ந் தேதி மாலை 4 மணியளவில் மண்டபம் ரெயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது, 6-ந் தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் சேர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments