மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் - சென்னை இடையே விமான சேவை
சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து இருந்தது. கரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அப்போது, சேலம் - சென்னை இடையிலான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. கரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலை திரும்பிய பின்னர் நாடு முழுவதும் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. ஆனால், சேலத்துக்கு விமானம் இயக்கி வந்த ட்ரூஜெட் விமான நிறுவனம், விமான சேவையை மீண்டும் தொடங்கவில்லை.

எனவே, மீண்டும் சேலம் - சென்னை இடையே விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், சேலத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்க முன்வந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை - சேலம், சேலம் - சென்னை இடையே விமான சேவை தொடங்கியது.

முதல் பயணமாக சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் பயணித்தவர்களை, மாவட்ட ஆட்சியர் கார் மேகம், சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 11.20 மணிக்குப் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,

பகல் 12.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடையும். பின்னர் அதே விமானம் சேலத்திலிருந்து பகல் 12.50 மணிக்குப் புறப்பட்டு, சென்னையை பகல் 1.45 மணிக்கு சென்றடைகிறது. சேலம் விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க போதுமான வசதிகள் இல்லாததால், 72 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது.

சென்னை - சேலம் இடையே ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூ.2,390 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பை பொறுத்து கட்டண விகிதத்தில் சிறிது மாற்றம் இருக்கும் என்று விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் - சென்னை இடையே விமான சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவா ஆளுநர்..: சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று புறப்பட்டுச் சென்ற முதல் விமானத்தில், கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, நடிகை நமீதா உட்பட 43 பயணிகள் பயணித்தனர். அவர்களுக்கு விமான ஊழியர்கள் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments