சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள் தொற்று நோய் பரவும் அபாயம்
சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் வழியாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மல்லிப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க மனோரா சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இதை காண நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.

தொற்று நோய் பரவும் அபாயம்

இந்த நிலையில் மல்லிப்பட்டினம் கடைவீதி அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிவருகின்றனர். இதனால் தற்போது அங்கு துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் கழிவுகள் இடையே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இதேநிலை நீடித்தால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்த குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments