பல ஆண்டுகளாக பாதியோடு நிற்கும் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை திட்டம் முழுமை பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




பட்டுக்கோட்டையில் பாதியோடு நிற்கும் புறவழிச்சாலை திட்டம் முழுமை பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பட்டுக்கோட்டை நகரம்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக பட்டுக்கோட்டை பெருநகரமாகும். உதவி கலெக்டர் அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நகராட்சி அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்பட அனைத்து அலுவலகங்களும் உள்ளன. வருவாய் கோட்ட தலைநகரமாகவும் விளங்கி வருகிறது. நகரில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளும், நகராட்சி பள்ளிகளும் உள்ளன.

பட்டுக்கோட்டை சுற்றுப்புற ஊர்களில் தனியார் கல்லூரிகளும், மேல்நிலைப் பள்ளிகளும் ஏராளமாக உள்ளன. இப்பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக அரிசி, நெல், தேங்காய், உப்பு, மீன், கருவாடு முதலிய உணவுப் பொருட்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

புறவழிச்சாலை

பொதுவாக பட்டுக்கோட்டை நகரம் தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்து இணைப்பு நகரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையின் படி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்டமாக ரூ.32 கோடி செலவில் அணைக்காடு கிராமத்தில் தொடங்கி பொன்னவராயன்கோட்டை, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை கிராமம் வரை சுமார் 7.4 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.

பணி நின்று விட்டது

ஆனால் எஞ்சிய பகுதியில் திட்டமிட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி நின்றுவிட்டது. ஆலடிக்குமுளை கிராமத்தில் இருந்து பட்டுக்கோட்டை, பெருமாள் கோவில் கிராமம், கொண்டிகுளம், சேதுபாவாசத்திரம் சாலை வழியாக அதிராம்பட்டினம் சாலையிலிருந்து அணைக்காடு புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் அமைக்க திட்டமிடப்பட்டு நில ஆர்ஜிதம் செய்து நெடுஞ்சாலைத் துறையினரால் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது புறவழிச்சாலை திட்டம். எனவே பாதியோடு நிற்கும் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments