தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை 10-ந் தேதியே வழங்கப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதியே ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

11.85 லட்சம் பேர் மேல்முறையீடு

கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 56½ லட்சம் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும், நேரில் வீடுகளுக்கு சென்று கள ஆய்வு மூலமாகவும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை மறுசீராய்வு செய்து வருகின்றனர்.

10-ந் தேதி வழங்கப்படுகிறது

அதில், தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான காரணமும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்ப தலைவிகள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 15-ந் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை இந்த மாதம் 10-ந் தேதியே வழங்கப்பட உள்ளது.

அதே நேரத்தில், மேல்முறையீடு செய்தவர்களில் தகுதி உடைய குடும்ப தலைவிகளுக்கும் 10-ந் தேதியே மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அது குறித்த உறுதியான தகவல்களை வெளியாகவில்லை. எனினும், விரைவில் 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments