ரூ.6 ஆயிரம் கட்டணத்தில் தூத்துக்குடி-இலங்கை இடையே சொகுசு கப்பல் போக்குவரத்து ஜனவரி மாதம் தொடங்குகிறது




தூத்துக்குடி-இலங்கை காங்கேசன் துறை இடையே ஜனவரியில் நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து தொடங்க மும்பை மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு வங்க கடலில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடந்த மாதம் 20-ந்தேதியோடு சேவை நிறுத்தப்பட்டது.

மோசமான வானிலையின் போது கடலில் பயணிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. என்பதால், சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீரான பிறகு வரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும்' என்று கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தூத்துக்குடி-இலங்கை காங்கேசன் துறை

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையே மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது. குறிப்பாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக கொண்டு, தூத்துக்குடி-இலங்கை காங்கேசன்துறை, தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக, துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மும்பையில் நடந்த சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

முதல் கட்டமாக தூத்துக்குடி-இலங்கை காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கப்படுகிறது. இதற்கான கப்பல் விரைவில் தூத்துகுடிக்கு வர உள்ளது. தொடர்ந்து, தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி இடையே கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக துறைமுக அதிகாரிகள் கூறினர்.

கப்பலில் நவீன வசதிகள்

கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட உள்ள ஏ.பி.ஜெ. இம்பெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெ.மகிபன் கூறும்போது, ‘தூத்துக்குடி-இலங்கை காங்கேசன் துறை இடையே சிறிய வகை கப்பல் ஜனவரி முதல் இயக்கப்படுகிறது. தினசரி 120 கடல் மைல் தொலைவை இந்த கப்பல் 3 முதல் 4 மணிநேரத்தில் கடக்கும். அதில், எக்கானமிக் கிளாஸ் 350 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.6 ஆயிரம்), பிசினஸ் கிளாஸ் 50 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.12 ஆயிரம்) என 400 பயணிகள் மற்றும் 40 கார்கள், 28 பஸ் மற்றும் டிரக்குகள் கொண்டு செல்ல முடியும். சுற்றுலாவிற்கு சொந்த கார்கள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள் தங்கள் கார்கள் மற்றும் பஸ்களையும் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வரமுடியும். சொகுசு கப்பலில் வரி இல்லாத விற்பனை கடைகள் (டூயூட்டி பிரி ஷாப்), ஓட்டல்கள், பொழுதுபோக்கு கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து காலையில் புறப்பட்டு பகல் வேளையில் இலங்கையைச் சென்றடையும். பிறகு பிற்பகலில் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு வந்தடையும். இந்த கப்பலில் பயணிக்க விமானத்தில் பயணிக்கத் தேவைப்படுவது போல விசா, பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். அதேபோல் 80 கிலோ எடையை மட்டுமே பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments