தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தொழில் தொடங்க...

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் எனில் 45 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் எனில் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து, ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை- 622005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04322-221794 என்ற தொலைபேசி எண் அல்லது 8925533980 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments