முக்கண்ணாமலைப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு




அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி புதூர் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலெட்சுமி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டு விஷேசத்திற்காக பொருட்கள் வாங்குவதற்காக அன்னவாசல் சென்று விட்டார்.

பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயலெட்சுமி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் மற்றும் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

10 பவுன் நகை தப்பியது

பீரோவில் மற்றொரு டப்பாவில் 10 பவுன் நகை இருந்தது. இது மர்மநபர்கள் கண்ணில் படாததால் 10 பவுன் நகை தப்பியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments