வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி தொடங்கியது. இருப்பினும், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ்வு பகுதி

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகிற 16-ந்தேதி நிலவும்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு

இதன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (புதன்கிழமை), சென்னை, திருவள்ளூர்,காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தாழ்வு பகுதி காரணமாக, வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். இதனால், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நாளையும் (புதன்கிழமை), மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, அதை ஒட்டிய மத்திய கிழக்கு-தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு வருகிற 16-ந்தேதியும் மீனவர்கள் செல்ல வேண்டாம். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வருகிற 17-ந்தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments