புதுக்கோட்டையில் ரூ.76.72 கோடியில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை; சுகாதாரத்துறை கட்டிடங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்




புதுக்கோட்டையில் ரூ.76.72 கோடியில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அரசு பல் மருத்துவக்கல்லூரி

புதுக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் ரூ.67.83 கோடி செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடம் மற்றும் மாவட்டத்தில் ரூ.8.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 27 பொது சுகாதாரத்துறை கட்டிடங்கள் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேநேரத்தில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலியில் ஒலிபரப்பப்பட்டன. விழாவுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார்.

சுகாதார நிலையங்கள்

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த பல் மருத்துவக்கல்லூரி தென் தமிழகத்திற்கே பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 999 எண்ணிக்கையில் இயங்குகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ கட்டிடங்கள் மிக சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மேலும் தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இது பரிசீலனையில் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது.


67 இடங்களில் மருத்துவமனைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 45 எண்ணிக்கையில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.46 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல மாவட்டத்தில் ரூ.101 கோடியே 35 லட்சத்தில் 67 இடங்களில் புதிதாக துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

487 விருதுகள்

கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 556 விருதுகள் கிடைத்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்ட பின் 487 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில் தமிழகத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 79 விருதுகள் கிடைத்துள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் கிடைத்த விருதுகள் மொத்த எண்ணிக்கை 50 ஆகும்.

அமைச்சர்கள்

கடந்த ஆட்சி காலத்தில் 29 விருதுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. இப்படித்தான் சுகாதாரத்துறை இருந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இன்று சுகாதாரத்துறையில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.பி.க்கள் அப்துல்லா, நவாஸ்கனி, சின்னதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம், முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

50 மாணவர்கள் சேர்க்கை

இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. சுமார் 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டிடம், மாணவ-மாணவியர் விடுதிக் கட்டிடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர், நிர்வாகம் மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து விரைவில் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு கூடுதல் வசதிகள் செய்யப்படும் என்றார்.

செவிலியர் குடியிருப்பு என மொத்தம் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டிடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments