இனி 2 மாதத்துக்கு திறக்க தடை: பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 30-க்கும் மேற்பட்ட படகுகள்




2 மாதத்திற்கு பாம்பன் தூக்குப்பாலம் திறக்க தடை காரணமாக நேற்று தூக்குப்பாலம் திறக்கப்பட்ட போது 30-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.

பாம்பன் தூக்குப்பாலம்

பாம்பன் கடலில் ரூ.535 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் மையப்பகுதியில் தூக்குப்பாலத்தை பொருத்தும் பணியானது விரைவில் தொடங்கப்பட உள்ளது. மையப்பகுதியில் புதிய தூக்குப்பால பணிகள் தொடங்கப்பட உள்ளதை தொடர்ந்து அந்த தூக்குப்பாலத்தை மையப்பகுதியில் தூண்கள் மீது நிறுத்தும்போது அதன் எடையை தாங்கி இருக்கும் வகையில் மையப்பகுதி கடலுக்குள் தற்காலிகமாக இரும்பு கம்பிகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த இரும்பு கம்பிகள் அமைக்கும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதனால் டிசம்பர், ஜனவரி வரையிலும் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் ரெயில்வே நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

30-க்கும் மேற்பட்ட படகுகள்

இதுகுறித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்திற்கும் ரெயில்வே துறை மூலம் எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. தூக்குப்பாலம் இன்னும் 2 மாதத்திற்கு திறக்கப்படாது என்பதால் கடைசியாக நேற்று மீன் பிடி படகுகள் கடந்து செல்ல திறக்கப்பட்டது. அப்போது பாக்ஜலசந்தி கடல் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆய்வு பணிக்காக 4 படகுகளும் பாலத்தை கடந்து சென்றன. தொடர்ந்து மண்டபத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளும் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

புதிய தூக்குப்பாலத்தை பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்றும், புதிய பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தற்போது உள்ள பழைய ரெயில் தூக்குப்பாலம் நிரந்தரமாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments