பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலம் பிப்ரவரி 24-ந் தேதி திறப்பு ரெயில்வே வாரிய உறுப்பினர் ரூப்நாராயண்சங்கர் பேட்டி





பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி திறக்கப்பட உள்ளதாக ெரயில்வே வாரிய உறுப்பினர் ரூப்நாராயண்சங்கர் கூறினார்.

புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர்(கட்டமைப்பு) ரூப்நாராயண் சங்கர் ஆய்வு செய்தார். அவர் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் பொருத்த வடிவமைக்கப்பட்டு வரும் தூக்குப்பாலம், பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் பழைய ரெயில் பாலம் பழுதாகி விட்டதால் அதன் அருகிலேயே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

பிப்ரவரி 24-ந் தேதி

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து அதே மாதம் 24-ந்தேதி புதிய ரெயில் பாலம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில் பால திட்டம் நாட்டிலேயே நடைபெறும் மிக முக்கியமான பணியாகும். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி இதன் திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான சர்வே பணிகளும் முடிந்துவிட்டன. ஆனால் அதற்கு தேவையான இடம் மாநில அரசால் இன்னும் வழங்கப்படவில்லை. மண்டபம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ரூ.90 கோடி நிதியில் நடைபெற்று வரும் ராமேசுவரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையேயான ரெயில் பாதை மற்றும் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.

மதுரை ரெயில் நிலையம்

இதைதொடர்ந்து நேற்று மாலை மதுரை ரெயில் நிலையத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் ரெயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் நடந்து வரும் பணிகள், 1-வது பிளாட்பாரத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகள், கட்டுமான பணிகளுக்கான தளவாடங்கள் கையாளும் பகுதி, பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நடந்து வரும் துணை மின் நிலையம், ரெயில்வே பாதுகாப்பு படை பண்டகசாலை, ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலைய சுரங்கப்பாதை பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, தென்னக ரெயில்வே தலைமை கட்டுமான பிரிவு என்ஜினீயர் தவமணிப்பாண்டி, கட்டுமானப்பிரிவு துணைத்தலைமை என்ஜினீயர் நந்தகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments