தஞ்சையில் இருந்து அடுத்த மாதம் விமான சேவை முதல் கட்டமாக பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு இயக்கப்படுகிறது
தஞ்சையில் இருந்து அடுத்த மாதம்(டிசம்பர்) விமான சேவை தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தஞ்சையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமானப்படை நிலையம்

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே புதுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது விமானப்படை நிலையம். கடந்த 2006-ம் ஆண்டில் இந்திய வான்படையால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த விமானப்படை நிலையம் ஒரு விமான நிலையமாக செயல்பட்டு வந்துள்ளது. அதாவது 1990-ம் ஆண்டுகளில் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வாயுதூத் விமான சேவை இயக்கப்பட்டது. பின்னர் போதுமான ஆதரவில்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

விமான சேவை இயக்க கோரிக்கை

2012-ம் ஆண்டு முதல் இது முதன்மையான வான்படை நிலையமாக விளங்கி வருகிறது. இந்த விமானப்படை தளம் முற்றிலும் போர் விமானங்களை கொண்டது ஆகும். இந்த நிலையில் தஞ்சை வளர்ந்து வரும் நகரமாக விளங்கி வருகிறது. மேலும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நகராட்சியாக இருந்த தஞ்சை, மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் திருச்சிக்கு சென்று அங்கிருந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதையடுத்து தஞ்சையில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் முதல்...

இந்த நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தில் நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் தஞ்சை உள்ளிட்ட கைவிடப்பட்ட சிறிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. இதில் தஞ்சை விமான நிலையத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கி முடிந்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக அடுத்த மாதம்(டிசம்பர்) மாதம் முதல் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னை, பெங்களூரு

இந்த நிலையில் அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர்டாக்சி நிறுவனமும் டிசம்பர் மாதம் முதல் தனது விமான சேவையை எந்தெந்த ஊர்களில் இருந்து தொடங்குகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தஞ்சையில் இருந்து சென்னை, தஞ்சையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து தஞ்சை, சென்னையில் இருந்து தஞ்சைக்கு விமானங்கள் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோன்று அந்த நிறுவனம் தமிழகத்தில் வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments