கும்பகோணம் அருகே போலி சித்த வைத்தியர் வீட்டில் தோண்ட, தோண்ட கிடைத்த எலும்புகள் மனிதர்களுடையதா? போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் போலி சித்த வைத்தியர் வீட்டில் தோண்ட, தோண்ட கிடைத்த எலும்புகள் மனிதர்களுடையதா? என போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலி சித்த வைத்தியர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(வயது 47). இவர் தன்னை சித்த வைத்தியர் என்று கூறிக்கொண்டு பலருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அசோக்ராஜ்(27), சிகிச்சைக்காக சென்றார். அப்போது கேசவமூர்த்தி, அசோக்ராஜுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது அசோக்ராஜ் மயங்கி விழுந்தார்.

உடலை துண்டு, துண்டாக வெட்டி புதைத்தார்

இதையடுத்து கேசவமூர்த்தி, அசோக்ராஜின் தலைைய துண்டித்து கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் புதைத்து வைத்திருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது கேசவமூர்த்தி உண்மையான சித்த வைத்தியர் இல்லை என்பதும், அவர் தன்னை சித்த வைத்தியர் என்று கூறிக்கொண்டதும் தெரிய வந்தது.

கைது

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர். மேலும் கேசவமூர்த்தியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜ் உடலையும் தோண்டி எடுத்தனர்.

அப்போது கேசவமூர்த்தி வீட்டில் மற்றொரு மனித தாடை எலும்பு கிடைத்தது. இதனை மரபணு பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

தோண்ட, தோண்ட கிடைத்த எலும்புகள்

மற்றொரு மனிதருடைய தாடை எலும்பு கிடைத்ததால் அசோக்ராஜை போல் மேலும் பலரையும் கேசவமூர்த்தி கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லின் எந்திரம் மூலம் போலீசார் தோண்டினர். சுமார் 5 மணி நேரம் நடந்த தோண்டும் பணியின்போது 20-க்கும் மேற்பட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தோண்ட, தோண்ட எலும்புகள் கிடைத்தது போலீசாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

்கேசவமூர்த்தி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். அவை மனிதர்களுடையதாக இருக்கலாம் என்பதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேசவமூர்த்தியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டால்தான் இந்த விவகாரத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் முழுமையாக அவிழும் என போலீசார் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments