அடுக்குமாடி குடியிருப்புக்கு கூடுதல் தொகை கேட்டதால் பட்டுக்கோட்டை சாலையில் பயனாளிகள் திடீர் மறியல்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மூலமாக அறந்தாங்கியில் 120 அடுக்குமாடிகள் கட்டப்பட்டன. இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1 லட்சத்தை 4 தவணைகளாக கட்ட அறிவிப்பு வெளியிட்டனர். பிறகு திடீரென்று முழுத் தொகையும் கட்டினால் தான் வீடு தரப்படும் என்று வாரியம் கூறிவிட்டது. இதனைதொடர்ந்து பயனாளிகள் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முழு தொகையை கட்டினார்கள். இந்தநிலையில் பயனாளிகள் தலா ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கட்டினால் தான் வீடு தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பயனாளிகள் பட்டுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments