மிக்ஜம் புயல் எச்சரிக்கை: புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை வாழ்வாதாரம் பாதிப்பு




மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜம் புயல்

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் கடந்த 2-ந்தேதி அறிவுறுத்தப்பட்டது.

அன்று முதல் அந்த பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடித்தளத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரம் பாதிப்பு

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்த பகுதியில் பிடித்து வரப்படும் மீன்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தினந்தோறும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தற்போது மீன்பிடி தடையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தொழில்கள் பாதிப்பு

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி சார்ந்த தொழில்கள் எண்ணற்றவை உள்ளன. அதில் முக்கியமாக டீசல் பங்க், ஐஸ் பிளான்ட், மீன்பிடி வலை மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம், ஓட்டல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வியாபாரம் இல்லாமல் அவை அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அந்த தொழில்களில் ஈடுபடும் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments