மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்காக புதுக்கோட்டை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் 2 கிராமமக்கள் மனு




மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்காக புதுக்கோட்டை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கிராம மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேக்காட்டூர் ஊராட்சியில் 1,2,3 ஆகிய வார்டுகளை சேர்ந்த சிவபுரம், மலுக்கன்பட்டி, கம்மன் சட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், 9 ஏ நத்தம் பண்ணை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்காக நகராட்சியுடன் தங்கள் கிராமங்கள் இணைக்கப் பட உள்ளதை எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பகுதியை ஊராட்சியாகவே தொடர வேண்டும் என 2 கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்தனர்.

வரி விதிப்பு உயரும்

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் ஊராட்சியாக இருக்கிறதில் வளர்ச்சி பெறாமல் உள்ளது. வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம் இல்லாமல் காணப்படுகிறது. மாநகராட்சியாக தரம் உயரும் போது வரி விதிப்புகள் அதிகமாகும். இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எங்களிடம் பொருளாதார வசதி அந்த அளவுக்கு இல்லை. விவசாயத்தையும், கூலி வேலையும் நம்பி உள்ளோம். ஊராட்சியாக இருக்கிற போது கிடைக்கக்கூடிய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போகும். எனவே எங்கள் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக்கூடாது’’ என்றனர். ஆலங்குடி அருகே மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மனு கொடுக்க மட்டும் அனுமதி அளித்தனர்.

417 மனுக்கள்

கூட்டத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதுக்கோட்டை நகரப் பகுதியில் தெருநாய்கள், குரங்குகள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாக்கடையில் கழிவு நீர் தேங்கியிருப்பதையும், குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதை அகற்ற கோரியும் மனு கொடுத்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

மணமேல்குடி அருகே பிராமணவயல் கிராமத்தில் வீட்டில் தீ விபத்தில் பலியான சரண்யா என்பவரின் குடும்பத்தினருக்கும், கணபதிபுரத்தை சேர்ந்த அஞ்சலி என்பவர் குளத்தில் மூழ்கி பலியானதில் அவரது குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் நிதியுதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments