கறம்பக்குடியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன பேரூராட்சி நிர்வாகம் அதிரடி
கறம்பக்குடியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

சுற்றித்திரிந்த மாடுகள்

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. மாடுகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொண்டு பாய்ந்ததால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகினர்.

மேலும் சாலையோர கடைகளில் உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் வாகனங்களில் வைத்திருக்கும் பொருட்களையும் இந்த மாடுகள் சேதப்படுத்தி வந்தன. எனவே சாலைகளில் கட்டுப்பாடு இன்றி சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அறிவிப்பு

இதுகுறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சாலையில் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து செல்லவேண்டும் எனவும், இல்லையேல் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிலர் மாடுகளை வீடுகளுக்கு பிடித்து சென்றனர். இருப்பினும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் தொடர்ந்து சுற்றித்திரிந்தன.

அபராதம் விதிப்பு

இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து சென்று பேரூராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா பகுதியில் அடைத்தனர். பின்னர் மாடுகளை பெற சென்ற உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து தொடர்ந்து மாடுகளை பராமரிக்காவிட்டால் மாடுகள் அரசு கால்நடை பண்ணையில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments