புதுக்கோட்டையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் படுகாயம் கட்டிடம் இடிந்து தரைமட்டம்




புதுக்கோட்டையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் படுகாயம் அடைந்தார். மேலும் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

பட்டாசு ஆலை

புதுக்கோட்டை அடப்பன்வயலில் கம்மாள தெருவில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 51) நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அளவில் தயாரிப்பு பட்டறை அமைத்து வெடிகள் தயாரிக்கப்படுகிறது. இதேபோல் வெடிகளை அடுக்கி வைக்க தனியாக ஒரு குடோனும் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று காலை 9.30 மணி அளவில் பட்டாசு ஆலைக்கு மூர்த்தி வந்தார். ஆலையில் வெடிகள் தயாரிப்பு பட்டறையின் கதவை திறந்து வெடிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த நாட்டு வெடிகள் ஒவ்வொன்றும் படபடவென வெடிக்க தொடங்கின. இதில் அந்த அறையில் தீ பற்றி எரிந்தது. வெடி சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உரிமையாளர் படுகாயம்

இந்த விபத்தில் உரிமையாளர் மூர்த்தி சிக்கி படுகாயம் அடைந்தார். இருப்பினும் அந்த அறையில் இருந்து அவர் தீக்காயங்களுடன் வெளியே வந்து அருகில் உள்ள குடோனிற்கு தீ பரவாமல் தடுக்க முயன்றார். இதற்கிடையே அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், திருக்கோகா்ணம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களிலும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்த மூர்த்தியை உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அப்பகுதி பொதுமக்கள் முயன்றனர். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. அதில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரைமட்டமானது

இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வெடி தயாரிப்பு பட்டறை கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. வெடிகள் வெடித்ததில் சத்தம் வந்து கொண்டிருந்ததோடு, தீயும் ஒரு புறமும் எரிந்து கொண்டிருந்தது. கரும்புகை அதிக அளவில் எழுந்தன. தீ கொளுந்து விட்டு எரிந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஆலையில் மற்றொரு இடத்தில் வெடிகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு தீ பரவாமல் இருந்ததால் கூடுதல் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் காலையில் ஊழியர்கள் பணிக்கு வர சற்று தாமதமானதால் அவர்கள் தப்பினர். இந்த வெடி விபத்தில் மூர்த்தியின் மொபட் முற்றிலும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடானது.

காரணம் என்ன?

விபத்து ஏற்பட்ட இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிாியா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்திற்கு பட்டாசு ஆலையில் வெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments