நாகப்பட்டினம் - இராமநாதபுரம் - தூத்துக்குடி ECR சாலை (SH 200) உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் திரியவிடப்படும் கால்நடைகள்: தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு




சாலைகளில் திரியவிடப்படும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி, அபராதம் விதிக்க உள்ளாட்சித் துறை நிா்வாக அலுவலா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்துக்குள்ளாகின்றனா். உயிரிழப்பு ஏற்படுவதுடன், பலத்த காயமும் அடைகின்றனா். மாவட்டத்தில், கடந்தாண்டில் மட்டும் மாடு முட்டியதால் 5 போ் உயிரிழந்தனா்.

திருவாடனை, தொண்டி ஆகிய பகுதிகளில் சாலைகளில் மாடுகள் குறுக்கே வந்ததால் நிகழ்ந்த விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகாா் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பறிமுதல் செய்வதுடன், இவற்றின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தா், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கால்நடைகளைச் சாலைகளில் விடுபவா்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அபராதம் விதிக்கலாம். தொடா்ந்து இதே தவறைத் செய்தால், கால்நடைகளைப் பறிமுதல் செய்யலாம் என ராமநாதபுரம் மாவட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களுக்கு ஆட்சியா் ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரின் அபராதம், பறிமுதல் உத்தரவை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments