எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

6 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 79 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சின்னையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (26), குமார் (36) ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்து, அவர்களது விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

கொந்தளிப்பு

பின்னர் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீன்பிடி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழக மீனவர்கள் நமது கடல் பகுதியில் நிம்மதியாக மீன்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாதந்தோறும் மீனவர்கள் கைது நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

நடவடிக்கை

ஆனால் இதுகுறித்து நிரந்தரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இலங்கை அரசை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும், அவர்களது 3 விசைப்படகுகளையும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments