வெளிநாடுகளுக்கு வேலை செல்ல விரும்புவோரா நீங்க?: வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை ‘போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாதீர்கள்




வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வெளியுறவு அமைச்சகம்

வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்து, வாழ்க்கையை இழக்கும் சூழலும் நேரிடுகிறது.

எனவே வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அதிகமான புகார்கள்

வெளிநாடுகளில் வேலை தேடுவோர், பதிவு பெறாத ஆட்தேர்வு ஏஜென்டுகளால் போலி பணி வாய்ப்புகள் மூலம் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருவது காணப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இழப்போரும் உள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இத்தகைய போலி ஏஜென்டுகள் இயங்கி வருவது குறித்த புகார்கள் அதிகமாக வருகின்றன. இந்த ஏஜென்டுகள் தங்கள் இருப்பிடம் மற்றும் தொடர்பு வழிகள் குறித்து குறைவான விவரங்களையே வழங்குகின்றனர்.

அவர்கள் வழக்கமாக வாட்ஸ்அப் மூலமே தொடர்பு கொண்டு வருகின்றனர். இது அவர்களது இருப்பிடம் மற்றும் அழைத்தவரின் அடையாளம், பணி வாய்ப்பின் உண்மைத்தன்மை போன்றவற்றை அறிவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

சரியான வேலைவாய்ப்பு

இந்த பதிவு பெறாத மற்றும் சட்ட விரோத ஏஜென்டுகள் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து உரிய லைசென்ஸ் பெறுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதற்கு இந்த லைசென்ஸ் மிகவும் அவசியம்.

இந்த ஏஜென்டுகள் கடினமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்ய தொழிலாளர்களை கவர்ந்து இழுக்கிறார்கள். பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சில வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், இஸ்ரேல், கனடா, மியான்மர் மற்றும் லாவோ ஆகிய நாடுகளில் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இதுபோன்ற புகார்கள் பதிவாகியுள்ளன.

ஒரு சரியான வேலை வாய்ப்பானது, வெளிநாட்டு முதலாளி, ஆட்சேர்ப்பு ஏஜென்டு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஆகியோரால் முறையாக கையொப்பமிடப்பட்ட வேலை ஒப்பந்தத்துடன் வழங்கப்படுகிறது.

சட்டப்பூர்வ சேவை

இந்த ஒப்பந்தத்தில், வழங்கப்படும் வேலையின் விதிமுறைகள், நிபந்தனைகள், சம்பளம் மற்றும் பிற படிகள் பற்றி குறிப்பிடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு அல்லது பணி விசா அல்லது அதற்கு இணையான விசாவின் அடிப்படையில் குடியேற அனுமதிக்க வேண்டும். சுற்றுலா விசாவில் அல்ல.

பொதுவாக, புகழ்பெற்ற வெளிநாட்டு முதலாளிகள் தொழிலாளர்களுக்கு விமான கட்டணம், போர்டிங் மற்றும் தங்கும் செலவு மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்கள்.

எனவே வெளிநாடுகளில் வேலை தேடுவோர் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ சேவைகளை வழங்கும் ஏஜென்டுகளை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

லைசென்ஸ் எண்

அனைத்து பதிவு செய்யப்பட்ட ஏஜென்டுகளுக்கும் ஒரு லைசென்ஸ் எண் வழங்கப்படுகிறது. அதை தங்கள் அலுவலகத்தில் அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். தங்கள் விளம்பரங்களிலும் அதை வெளியிட வேண்டும்.

அவர்களின் உண்மைத்தன்மையை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் பரிசோதித்து அறிந்து கொள்ளலாம்.

இதைத்தவிர வேறு வழிகள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வது, பண இழப்பு, உறுதியக்கப்பட்ட வேலைக்கு அனுப்பாமை, கடினமான வாழ்க்கை சூழலுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

எனவே போலி ஏஜென்டுகளிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆள்கடத்தல் குற்றம்

குடியேற்றச்சட்டம் 1983-ன்படி எந்தவொரு ஏஜென்டும் சேவைக் கட்டணமாக ரூ.30,000 மற்றும் ஜி.எஸ்.டி.க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மேலும் அதற்கான ரசீதும் வழங்கப்பட வேண்டும்.

பதிவு பெறாத ஏஜென்டுகள் வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் அது ஆள்கடத்தல் குற்றத்தில் சேர்க்கப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments