குரூப்-2 தேர்வு முடிவு ஜனவரி 12-ந் தேதி வெளியாகிறது டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு




குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

குரூப்-2, 2ஏ பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு துறைகளில் இருக்கும் பணியிடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களுக்கு தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு மூலம் நியமித்து வருகிறது.

குரூப்-2 என்று அழைக்கப்படும் நேர்முகத்தேர்வு பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் பணி இடங்களுக்கும், இதேபோல் குரூப்-2 ஏ என்று அழைக்கப்படும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளான, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் வெளியிட்டது.

முதன்மைத்தேர்வு

அதன்படி, இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். அவர்களுக்கு தேர்வு முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வெளியானது. 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதியதில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக சொல்லப்படுகிறது.

விரக்தி

இந்த நிலையில் தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிந்து கிட்டத்தட்ட 10 மாதங்களை கடந்தும் இதுவரை தேர்வு முடிவு வெளியாகவில்லை. தேர்வை எழுதிய தேர்வர்கள் எப்போதுதான் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்? என்ற விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

நேற்று முன்தினம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவு தாமதத்திற்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. தெரிவிக்கும்' என்றும் கூறினார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், ஆண்டு அட்டவணையை வெளியிடக்கோரி சமூக வலைதளத்தில் நேற்று தேர்வர்கள் வைரல் ஆக்கினர்.

இதையடுத்து நேற்று இரவு டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் இருந்து குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியானது.

தாமதம் ஏன்?

அதில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் கூறியிருப்பதாவது:-

குரூப்-2 முதன்மை தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும், குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023-ல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் குரூப்-2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழ்நிலையாலும், சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாகவும் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 12-ந் தேதி

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், குரூப்-2 தேர்வு முடிவுகள் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் குரூப்-2 தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தேர்வு முடிவு வெளியாக 10 மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில், இந்த மாதத்திலாவது தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த தேர்வர்களுக்கு, தற்போது ஜனவரி மாதம்தான் தேர்வு முடிவு வெளியாகும் என்ற செய்தி ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments