அதிக காலியிடங்கள் உள்ள முன்னுரிமை மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு




அதிக காலியிடங்கள் உள்ள முன்னுரிமை மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு மூலம் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், போட்டித்தேர்வு அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மேலும் சில உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னுரிமை மாவட்டங்கள்

* 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்வாகும் தேர்வர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

* அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட விவரங்களை, நியமனம் செய்த 15 தினங்களுக்குள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை, தேர்வர்கள் மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட்ட விவரங்கள், முன்னுரிமை மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தேர்வர்களின் விவரங்கள், 500 மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்வர்களின் விவரம் ஆகியவற்றுடன் அரசுக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்டும்.

5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்

* முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை நியமனம் செய்யும்போதே, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந் தேதியன்று உள்ளவாறு ஆசிரியர் பணியிடங்களை கணக்கில் கொண்டு, ஜூன் 30-ந் தேதிக்குள் பணி நிரவலை முடித்து, ஜூலை 1-ந் தேதி அன்று உபரி ஆசிரியர் பணியிடங்கள், பணிநிரவல் செய்யப்பட்ட மாவட்டங்கள், முன்னுரிமை மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்ய்யப்பட்ட விவரங்கள், 500 மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிக்கு பணிநிரவல் செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த தகவலை அரசு அனுமதிக்கு அனுப்ப வேண்டும்.

பொது கலந்தாய்வு

* வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பணி நிரவல் நடைமுறை பின்பற்றப்பட்ட பின்னரே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட்டு இருந்தாலும், அதற்கு பின்பு பணி நியமனங்கள் எதுவும் நடைபெறாததால், அந்த அரசாணை நடைமுறைக்கு வராமல் இருந்தது. தற்போது புதிய நியமனம் நடைபெற உள்ளதால், அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி 757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கேட்டு அனுமதி கோரியிருந்த கருத்துருவும் ஏற்கப்படவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments