ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஈரோடு - திருச்சி ரெயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் முதுநிலை இயக்க அலுவலர் தகவல்




ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஈரோடு - திருச்சி ரெயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என முதுநிலை இயக்க அலுவலர் கூறினார்.

நாகூரில் ஆய்வு

தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை இயக்க அலுவலர் ரதிப்ரியா நாகூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாகூர், நாகை ரெயில் உபயோகிப்போர் நலச்சங்க தலைவர் மோகன், செயலாளர் சித்திக், துணைத்தலைவர் முகமது தம்பி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு-திருச்சி ரெயிலை தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அதிகாலை காரைக்கால் வரும் கம்பன் விரைவு ரெயில் பெட்டிகளை காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி வரை விரைவு ரெயிலாக இயக்க வேண்டும்.

85 சதவீதம் வருமானம்

அதிகாலையில் நாகை-வேளாங்கண்ணி டெமு ரெயிலை வேளாங்கண்ணியில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி வரை இயக்க வேண்டும். தென்னக ரெயில்வே திருச்சி கோட்டத்தில் சரக்கு ரெயில் வருவாயில் 85 சதவீதம் வருமானம் நாகூர், நாகை ரெயில்வே வழித்தடத்தில் இருந்தே கிடைக்கிறது.

காரைக்கால் அருகே உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து இந்த ரெயில் நிலையங்கள் வழியாக தான் நிலக்கரி சரக்கு ரெயில் மூலம் ஏற்றி செல்லப்படுகிறது. இவ்வாறு ரெயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருமானத்தை தரும் நாகூர், நாகை ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த 2 ரெயில் நிலையங்களையும் சேர்க்காமல் இருப்பது பயணிகளுக்கு ஏமாற்றத்தை தருகிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒப்புதல் கிடைத்தவுடன்...

மனுவை பெற்ற தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை இயக்க அலுவலர் ரதிப்ரியா, ‘ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஈரோடு - திருச்சி ரெயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும்’ என்றார். அப்போது தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட அலுவலர்கள் ரவிக்குமார், பாண்டியன், நாகூர் ரெயில் நிலைய மேலாளர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments